Monday, December 24, 2007

நடைப்பூங்கா நையாண்டிகள்

எழலாமா வேண்டாமா? இன்னும் 5 நிமிடம், அப்படி இப்படி புரண்டு படுத்து ஒருவழியாக எழுந்து காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தால் எனது நேரே முதல் மாடியில் இருப்பவர் ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இழுத்துக்கொண்ட்டிருப்பார்.மெல்லிய பனிமூட்டத்தை குடைந்து நடைபோட்டால் தெருக்களில் பெருசுகள் குள்ளா மாட்டிக்கொண்டு குளிருக்கு இதமாக புகைத்துக்கொண்டு கூடவே இருமிக்கொண்டு நடைப்போட்டுக்கொண்டிருக்கும். சில கடைகளில் சுப்ரபாத இசை ஒலிக்கும், நமக்கு கடவுளும் மந்திரமும் ஒத்துவராது ஆனாலும் பாடும் குரலும் இசையும் ஒருவித ஈர்ப்பை கொடுக்கும். பூங்காவை அடைந்து நடையை சற்று வேகப்படுத்தினால் நமக்கென காத்திருந்தது போல் சிலர் புண்ணகைப்பார்கள், நான் அணிந்திருக்கும் "சேகுவேரா" விற்கும் நம் நடைக்கும் ரசிகர்கள். பெருசுகள் பூங்காவில் உள்ள பெஞ்சுகளை ஆக்கிரமித்து சூடான அரசியல் விவாதம், கிரிக்கெட்டு வெட்டிப்பேச்சு, செய்திகளை பேசிக்கொண்டிருப்பர். சிலர் மணைவியுடன் அமர்ந்து ஓஜஸ் முத்திரை என்ற ஆசன வாயையும் மூச்சுக்காற்றையும் ஒன்றாக உள்ளிழித்து வெளியேவிடும் பயிற்சியை செய்துகொண்டிருப்பார்கள். சிலர் பெஞ்சுகளில் அமர்ந்து நகங்களை உரசிக்கொண்டிருப்பார்கள், இப்படி செய்வதால் மூளை நன்றாக வேலை செய்யுமாம். சிலர் நடப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள், வெளியே இருந்து பார்த்தால் ஏதோ உள்ளே ஒரு பேரணி நடப்பது போல இருக்கும் அவ்வளவு நெருக்கடியாக மக்கள் நடந்துகொண்டிருப்பார்கள். சிலர் உடலே அசையாமல் நடப்பார்கள், சிலர் இராணுவ வீரரை போல கைகளை வீசிக்கொண்டிருப்பர், சிலர் சும்மா ஏதோ ஓய்வாக நடப்பார்கள், இதில் என்னை கவர்ந்தவர்கள் 80 வயதை கடந்த தம்பதிகள் தான், நாள் தவறாமல் யார் உதவியும் இன்றி நடந்துகொண்டிருப்பார்கள். சிலர் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நடப்பார்கள், ஒரு காதல் ஜோடி அதிகாலை பூங்காவில் அமர்ந்து சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருக்கும், நாம நடக்க இடம் இல்லாமல் இருக்க சிலர் குறுக்கே புகுந்து ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலரை பார்த்தால் இவர்கள் உடல் பருமணை குறைக்க வாய்ப்பு மிக குறைவு என்று தோன்றும் ஆனால் அவர்களும் தவறாமல் வருகிறார்கள். சிலர் தனது உடல் அதிர்வுகளை அறிந்து, தேவைக்கேற்ப நடப்பார்கள், பலர் குடும்பத்துடன் நடந்துகொண்டிருப்பார்கள். நடைப்பயிற்சி முடிந்து சிலர் உடற்பயிற்சி மெற்கொள்வர். அதில் என்னை கவர்ந்தவர்கள் சிலர், ஒரு பெரியவர் தினமும் விளக்கு கம்பத்தை பிடித்து இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருப்பார், நல்லவேளை விளக்கு கம்பத்தை நல்ல காண்கிரீட் கலவையில் நிறுத்தியிருக்கிறார்கள், ஒரு சிலர் செடியின் மறைவில் நின்று குணிந்து நிமிர்ந்துகொண்டு இருப்பார்கள், சிலர் டப், டப் என முன்னும் பின்னுமாக கைகளை தட்டி கொசு அடித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவர் அமர்ந்தபடியே கிரைண்டர் மாவாட்டுவது போல இடுப்பை ஆட்டிக்கொண்டிருப்பார், ஒருவர் தலைகீழாய் நிற்கு கால்களை கிளைகளை போல விரித்து வித்தைக் காட்டிக்கொண்டிருப்பார். சிலர் பூங்கா காப்பாளருக்கு தெரியாமல் செம்பருத்தி பூ திருடிக்கொண்டிருப்பார்கள். சில அழகான பெண்கள் அசைந்து நெளிந்து போவது நம் இளமணதை கிள்ளுவதாக இருக்கும். இப்படி அழகால் நம்மை கைது செய்பவர்களும் உண்டு, பல இளசுகள் ஒரு ரொமாண்டிக் லுக்குடன் போய்கொண்டிருப்பார்கள். தவறாமல் நடைபயிற்சி செய்துவந்தால் உடல் ஆரோக்கியமாகவும் பொழுது சுறுசுறுப்பாகவும் இருக்கிறது எனபதை அறிந்தவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

No comments: